Tuesday 11 October 2011

எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்ட வக்கீல்கள்



கோவை : துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் வக்கீலை தாக்கிய பெண் போலீஸ் எஸ்.ஐ., உள்பட ஐந்து போலீசாரை, கைது செய்ய வலியுறுத்தி எஸ்.பி. அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டனர். கோவை, துடியலூரைச் சேர்ந்தவர் வக்கீல் ஆனந்தீஸ்வரன். கடந்த 7ம் தேதி சிவில் வழக்கு ஒன்றுக்காக, துடியலூர் போலீஸ் ஸ்டேஷன் சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, தாக்குதலில் முடிந்தது. சிகிச்சைக்காக அவர், தனியார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. எஸ்.பி., நடத்திய விசாரணைக்குப்பின் பெண் எஸ்.ஐ.,உள்பட ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டனர்.
இச்சூழலில், வக்கீல் தாக்கப்பட்டதற்கு மேல் நடவடிக்கை எடுக்க வக்கீல்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் நேற்று நடந்தது. வக்கீல்கள் சங்கத் தலைவர் நந்தகுமார், செயலாளர் ரிச்சர்ட், பொருளாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏற்கனவே, பெண் எஸ்.ஐ.,ஒருவரால்,பார்வை குறைபாடுடைய வக்கீல் ரபீக் கடுமையாக தாக்கப்பட்டார். இதற்கு நியாயம் கேட்டு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம், மறியல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு வக்கீல், ஸ்டேஷனில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். இதை கண்டிக்கும் வகையில் வக்கீல்கள் பேசினர்.
இதன்பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: வக்கீலை தாக்கிய பெண் எஸ்.ஐ., உள்ளிட்ட ஐந்து பேரை சஸ்பென்ட் செய்யப்பட்டதோடு, அவர்களை கைது செய்து சிறையில்அடைக்க வேண்டும். அதுவரை கோர்ட் புறக்கணிப்பு நடக்கும். கைது நடக்கும் வரை கோர்ட்டுக்குள் போலீசார் நுழையவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.
போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதற்காக சீனியர் வக்கீல்கள் ஞானபாரதி, சஞ்சையன், முருகேசன் கொண்ட சட்ட ஆலோசனைக்குழு அமைக்கப்படும்.என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வக்கீல்கள் சங்கத் தலைவர் நந்தகுமார் தலைமையில் 400க்கும், மேற்பட்ட வக்கீல்கள் போலீசாரை கண்டித்து கோஷமிட்டபடி, ஊர்வலமாக சென்று எஸ்.பி.,அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காலை 12.00 மணிக்கு துவங்கிய முற்றுகைப் போராட்டம் மாலை வரை தொடர்ந்தது. கோவை எஸ்.பி.,உமா, கிருஷ்ணகிரி ஆகியோர் வக்கீல்களுடன் பேச்சு நடத்தினர். சமாதானமடையாத வக்கீல்கள் தொடர்ந்து போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர்.
பகல் 2.00 மணிக்கு டி.ஆர்.ஓ.,கற்பகம் பேச்சு நடத்தி பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம் என்றார். வக்கீல்கள் இதை ஏற்கவில்லை. இதனைத்தொடர்ந்து எஸ்.பி.,அறையில் அதிகாரிகளின் ஆலோசனை மேற்கொண்டனர். மாலை 5.00 மணிவரை முடிவு கிடைக்கவில்லை.
போராட்டத்துக்கு தலைமை தாக்கிய வக்கீல் சங்க தலைவர் நந்தகுமார் கூறியது: போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. தற்போதும் அவர் மருத்துவமனையில் சீரியசாக உள்ளார். இதற்காக போலீசாரை கைது செய்ய வேண்டும். முடியாவிட்டால் எஸ்.பி.,அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள எங்களை கைது செய்ய வேண்டும். இச்சம்பவத்தை கண்டித்து காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பு நடக்கும். வக்கீலை தாக்கிய போலீசாரை கைது செய்யும் வரை கோர்ட்டுக்குள் போலீசாரை நுழைய விடப்போவதில்லை, என்றார்.
கோவையில் முதன்முதலாக எஸ்.பி.,அலுலகத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டு, சரமாரியாக கோஷமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போக்குவரத்து மாற்றம்: வக்கீல்கள் ஊர்வலமாக சென்று எஸ்.பி.,அலுவலகத்தை முற்றுகையிட்டு,கோஷமிட துவங்கியதும் ஸ்டேட் பேங்க் ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பஸ்கள் திருச்சிரோடு வழியாக திருப்பிவிடப்பட்டது. இதனால் பஸ்சுக்காககாத்திருந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். காலை 12.00 மணிக்கு நிறுத்தப்பட்ட பஸ்கள் மாலை வரை இவ்வழியாக விடவில்லை.
வக்கீல்களுக்கு குடிநீர், உணவு வழங்கல்: போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்,பெண் வக்கீல்கள் கடும் வெயிலில் தரையில் உட்கார்ந்து கோஷமிட்டனர். இதனைத்தொடர்ந்து வக்கீல்கள் சங்கம் நடத்தும் உணவுக்கூடத்தில் இருந்து பெட்டி பெட்டியாக குடிநீர் பாட்டில்கள் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டது. மதிய உணவும் பொட்டலங்களில் விநியோகிக்கப்பட்டது. பிஸ்கட் பாக்கெட்களும் தரப்பட்டன.
ஆனாலும், போலீசார் கடும் வெயிலை பொருட்படுத்தாமல், எஸ்.பி.,அலுவலகத்துக்குள் வக்கீல்களை அனுமதிக்காமல் காவல் காத்தனர். வக்கீல்கள் தொடர்ந்து கோஷமிட, மாலை 5.00 மணி அளவில் டி.ஐ.ஜி.,பாலநாகதேவியும், கலெக்டரும் எஸ்.பி.,அலுவலகம் வந்தனர். இவர்களும்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வக்கீல்களுடன் பேச்சு நடத்தினர். கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வக்கீல்கள் முன்வைத்தனர்.

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...