Thursday 8 August 2024

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!


  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தி அறிவித்தது. இதை எதிர்த்து கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். 1970 ம் ஆண்டு மே 09 ல் பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் விவசாயிகள் கோயம்புத்தூரில் பேரணி நடத்தினார்கள். நகரம் அதிர்ந்தது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறா விட்டால், ஜூன் 15 ல் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், ஜூன் 19 ல் பந்த் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 போராட்டத்தின் உச்சத்தில் அரசாங்கம் ஒடுக்கு முறையை ஏவி, மூன்று விவசாயிகளின் உயிரைப் பறித்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அரசைப் பணியவைத்தன. மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 1 பைசா குறைக்கப்பட்டது. கடன் வசூல் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.

  காயங்கள் ஆறுவதற்கு முன்பாகவே மாநில அரசு மீண்டும் மின்சாரக் கட்டணத்தை 9 பைசாவிலிருந்து 12 பைசாவுக்கு உயர்த்தி, 01.01.1972 முதல் புதிய கட்டணத்தை அமல் படுத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவை மாவட்ட விவசாயிகள் முதலில் கிளர்ந்தெழுந்தனர். 1972 மார்ச்சில் 12 அம்சக் கோரிக்கைகளை, அரசிடம் முன்வைத்து நிறைவேற்றக் கோரினார்கள் விவசாயிகள்.

  15.04. 1972-க்குள் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கெடு விதித்தார்கள். மே 9-ல் மறியல் போராட்டம் தொடங்கியது. போராடிய விவசாயிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நகரவாசிகள் தினமும் நுகரும் காய்கறிகளையும் பாலையும் விவசாயிகள் நகரங்களுக்கு அனுப்புவதை 02.06.1972 முதல் 04.06.1972 வரை நிறுத்தினார்கள்.

  இதன் மூலம் தட்டுப்பாடு ஏற்படுத்தி, அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதே நோக்கம்.

  இதற்குப் பின்னும் அரசு பணியாததால் கோவை விவசாயிகள் 07.06.1972-ல் புதுமையாக மாட்டு வண்டிப் போராட்டத்தை நடத்தினார்கள். மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள், கோவை நகரின் சாலைகளிலும் சந்துபொந்துகளிலும் மத்திய சிறைச்சாலைக்கு முன்பும் நிறுத்தப்பட்டன. கோவை நகரம் ஸ்தம்பித்தது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'தி நியூயார்க் டைம்ஸ்' உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் அவர்களைப் பாராட்டி 'மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்' என்று இந்தப் போராட்டச் செய்தியை வெளியிட்டன. 

  போராட்டத்தின் வீச்சை உணர்ந்த அரசு பணிந்து 1972 ஜூலை 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அரசுடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதன்படி ஜூலை 19-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்காலிகமாக மின் கட்டண உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது. மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு 1 பைசா குறைக்கப்பட்டது. சிறையில் இருந்த அனைத்து விவசாயிகளும் விடுவிக்கப்பட்டார்கள்."

  தொடர்ந்து மாநில அரசாங்கத்தை இடைநீக்கம் செய்து கவர்னர் ஆட்சி முடிந்த பின் 1980 லிருந்து 1988 வரை எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்த அதிமுக அரசு தமிழகத்தில் முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு குறு விவசாயிகளுக்கு ஒரு ஹெச்.பி. குதிரைத் திறன் கொண்ட பம்புசெட் மோட்டாருக்கு மின் இணைப்புக்கு இலவச மின்சாரம் தரப்பட்டது.

  இன்னுயிரைத் தந்த அந்த தியாகிகளின் பெயர்களை முடிந்தளவு வரிசைப்படுத்துகிறேன்.

1. ஆயிகவுண்டர் (33) 19.06.1970 பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
2. மாரப்பக்கவுண்டர் (37) 19.06.1970 பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
3. இராமசாமி (25) 19.06.1970 பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
4. ஆறுமுகம் (25) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
5. முத்துச்சாமி (21) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
6. சாந்தமூர்த்தி (20) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
7. மணி (30) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
8. இராமசாமி (முத்து) (32) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
9. பிச்சைமுத்து (21) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
10. கோவிந்தராஜுலு (16) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
11. விவேகானந்தன் (35) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
12. இராமசாமி (23) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
13. முத்துக்குமாரசாமி (22) 05.07.1972 அய்யம்பாளையம், பல்லடம் தாலுகா

*14. சுப்பையன் (32) 05.07.1972 அய்யம்பாளையம், பல்லடம் தாலுகா*

15. கந்தசாமி நாயக்கர் (55) 05.07.1972 பழைய அப்பநேரி, கோவில்பட்டி தாலுகா
16. சீனிவாசன் (18) 05.07.1972 சாத்தூர் தாலுகா, இராமநாதபுரம் ஜில்லா
17. கந்தசாமிரெட்டியார் (42) 05.07.1972 அருப்புக்கோட்டை, சாத்தூர் தாலுகா
18. நம்மாழ்வார் (20) 05.07.1972 சூலக்கரை, சாத்தூர் தலுகா
19. கிருஷ்ணசாமி நாயக்கர் - - கோவை சிறையில்
20. பெரியகருப்பன் - - திருச்சி சிறையில்

 தியாகிகளுக்கு அய்யம்பாளையம், கோவில்பட்டி ஆகிய பல ஊர்களில் நினைவுத்தூண் நிறுவப்பட்டு ஆங்காங்கே இவர்களின் நினைவு நாளன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.

05.07.1972 அன்று விவசாயிகள் போராட்ட துப்பாக்கி சூட்டில் விவசாயிகளுக்காக களச்சாவு கண்ட விவசாயிகளின் தியாகி. சுப்பையன் அவர்களின் தவப்புதல்வன் திரு. ராஜேந்திரன் அவர்கள் 07.08.2024 அன்று இறைவணடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து, பல்லடம் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் சார்பில் இன்னாரது ஆன்மா இறைவணடி சேர வேண்டுகிறோம்.


No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...