Friday 14 August 2020

ஆடி மாதத்துக்கும் அம்மன் வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு? ஆடி மாதம் கூழ் ஊற்றுவது ஏன்?

       கோழி கூவுவதற்கு முன்பே, `அம்பிகையே... ஈஸ்வரியே...' என்று பாடல் ஒலிக்கத் தொடங்கிவிட்டால் ஆடி மாதம் பிறந்துவிட்டது என்று அர்த்தம். ஆடி மாதம் அம்மனுக்கான மாதம். அம்மன் கோயில் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கிவிடும். 


    வருடத்தில் எல்லா மாதங்களும் சிறப்பானவைதாம் என்றாலும், ஆடிமாதத்துக்கு மட்டும் எந்த மாதத்துக்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் தொடங்குகிறது. உலக உயிர்கள் அனைத்தையும் காத்து அருள்புரியும் சூரியன்,  கடக ராசியில் சஞ்சரித்து தெற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறார். எனவேதான் இதை `கற்கடக' மாதம் என்றும் குறிப்பிடுகிறோம். கடக ராசி சந்திரனுக்கு உரியது. சிவ அம்சமான சூரியன், சக்தியின் அம்சமான சந்திரனுடன் ஒன்றுசேர்ந்து கற்கடகத்தில் சஞ்சரிக்கும்போது சக்தியின் பலம் அதிகரிக்கிறது. ஆடி மாதத்தில் சிவபெருமானே சக்தியின் அம்சத்துக்குள் அடங்கிவிடுகிறார் என்பது ஐதீகம். எனவேதான், ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாகத் திகழ்கிறது.


    ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தேவர்களின் இரவு நேரம் என்பது ஆன்மிக நம்பிக்கை. இந்தப் புண்ணிய காலத்தில் சூட்சம சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த நேரத்தில் பூஜைகள், ஜபங்கள், நீத்தார் வழிபாடு ஆகியவற்றைச் செய்தால் அதிக அளவு பலன்கிடைக்கும். `பார்வதி தேவி மலையரசன் மகளாகப் பிறந்தது ஆடி மாதம்தான்' என்கிறது தேவி பாகவதம். மதுரை மீனாட்சி அம்மன் அவதரித்ததும் ஆடி மாதமே. இதே ஆடி மாதத்தில்தான் ஆண்டாளும் அவதரித்தாள். 


     மேலும், மழைக்குரிய தெய்வமாக மாரியம்மன் திகழ்வதால், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு வரும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடி மாதத்தில் கூழ் வார்த்தல், விளக்கு பூஜைகள், பூக்குழி இறங்குதல் போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன. ஆடிப் பூரம், ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய் என்று இந்த மாதம் முழுவதும் திருவிழாக்களுக்குப் பஞ்சமே இல்லை. 


    அம்மன் கோயில் பிரசாதங்களில் முதன்மையானவை வேப்பிலையும், எலுமிச்சைப் பழமும். இதற்குப் பின்னால், அறிவியல் காரணம் ஒன்றும் இருக்கிறது.  


    ஆடி மாதத்தில் மழைக்காலம் தொடங்குவதால் தொற்று நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புண்டு. வேப்பிலையும், எலுமிச்சைப் பழமும் இயற்கையான கிருமிநாசினிகள். இதனால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்படுகின்றன. மேலும் வெப்பம் குறைவான நாள்களில் எளிதில் செரிக்கக் கூடிய உணவு கூழ். அதுமட்டுமல்ல கூழ் இயற்கையாகவே அதிக அளவு எதிர்ப்புச் சக்தியையும், வலிமையையும் உடலுக்கு வழங்கக்கூடியது. அதனால்தான் `ஆடிக்கூழ் அமிர்தமாகும்' என்று கூறுகிறார்கள்.

இது தொடர்பாக புராணக்கதை ஒன்றும் உண்டு...

  கேட்பவை அனைத்தையும் அளிக்கும் காமதேனு பசுவை, ஜமதக்னி முனிவரிடமிருந்து அபகரிக்க கார்த்தவீர்யார்ஜுனரின் மகன்கள் திட்டம் போடுகிறார்கள். ஒருதருணத்தில், முனிவரைக் கொன்று காமதேனுவைக் கவர்ந்துசென்றுவிடுகிறார்கள். கணவர் இறந்ததும் தானும் அக்னிப்பிரவேசம் செய்கிறாள் ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவி. ஆனால், `தெய்வாம்சம் பொருந்திய ரேணுகா தேவியினால் உலகத்துக்கு நன்மை ஏற்படவேண்டும்' என்று நினைத்த இந்திரன், வருண பகவானிடம் மழையைப் பொழியும்படி உத்தரவிடுகிறார். மழை பெய்து தீயை அணைத்துவிடுகிறது. ஆனாலும், ரேணுகாதேவியின் உடல் முழுவதும் தீக்காயங்கள் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.  

  தீக்காயத்தின் வெம்மையைத் தணிக்கவேண்டி, வேப்பிலையைச் சுற்றிக்கொள்கிறார் ரேணுகாதேவி. தீக்காயங்களுடன் போராடிய ரேணுகா தேவிக்குக் கிராமத்து மக்கள் கூழ் காய்ச்சிக் கொடுக்கிறார்கள். அத்துடன் வெல்லம், இளநீர் ஆகியவற்றையும் கொடுத்து உதவுகிறார்கள். உடல் முழுவதும் கொப்புளங்களுடன் போராடிக்கொண்டிருந்த ரேணுகா தேவியிடம் சிவபெருமான், ``பராசக்தியின் அம்சமான நீ மக்களை நோயிலிருந்து காக்க வேண்டும்" என்று அருள்புரிகிறார். எனவேதான் அம்மை நோயைக் குணமாக்கும் வேப்பிலைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும் கூழுக்கும் அம்மன் வழிபாட்டில் முக்கியப் பங்கு வழங்கப்படுகிறது. 


  ஆடி மாதம் செவ்வாய் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் இருக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் நீண்ட ஆயுள் பெறவும், குழந்தை வரம் கிட்டவும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்குத் திருமணம் நடைபெறவும் ஆடி மாத விரதம் நலம் பயக்கும்.

  ஒரு குழந்தையின் இயல்பு என்ன. பகலெல்லாம் ஓடியாடித் திரிந்தாலும், இரவு வந்துவிட்டால் அந்தக் குழந்தை தன் தாயின் மடியைத்தானே தேடிச் செல்லும்... தாயின் மடியில்தானே இரவைப் பற்றிய அச்சம் நீக்கி ஆறுதலைப் பெறும்... அதுபோலவே, கால மாற்றமானது நம்முடைய வாழ்க்கையில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க, உலக மக்களாகிய நாமும் பராசக்தியின் அம்சமாக ஆங்காங்கே கோயில்களில் குடிகொண்டிருக்கும் அம்மனை நாடிச் சென்று, அவளுடைய திருவடிகளைத் தொழுது பணிந்து அருள் பெறுவோமாக...!

N2R நந்தகுமார்

Channel N2R 

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...