Friday 31 May 2019

யார் இந்த காண்ட்ராக்ட்டர் நேசமணி | Who is Nesamani



நேசமணி, காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே ஒரு பேனில்லாமல், ஏசி இல்லாமல், திரும்பக்கூட இடமில்லாமல் வயிற்றில் பாடுபட்டு பிறந்தவர் நேசமணி. சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்தே தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார்.


தன் அத்தை பெண் திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. அந்த காதல் கைகூடாதபோதும் கூட 'நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன்' என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி. வெறும் ஏரியா கவுன்சிலராக இருந்து சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்டனில் வக்கீலாக வேலை செய்தாலும் நேசமணிக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவில்லை. மீண்டும் குற்றாலத்தில் வந்து ஒரு டிவிஎஸ் 50 வாங்கிக்கொண்டு கடலைமிட்டாய் வாங்கித்தின்பதோடு சரி என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் நேசமணி. இப்படி இருந்தபோது தமிழ்நாடு போலீஸ் அவரை கைது செய்து கொரில்லா செல்லில் அடைத்தது. அதிலிருந்து ஹெல்மேட்டோடு ஒரு ஆட்டோவில் தப்பி வந்து மீன் வியாபாரம் செய்தபோதும் அவருடைய விற்பனை கரும்பலகையை அந்நிய சக்திகள் அழித்த கதையும் மிகவும் கவலைக்குரியது.


எதுவும் சரியாய்ப்போகவில்லை என்று திருடியாவது பிழைப்போம் என்று முடிவெடுத்தபோது ஒரு குதிரை ஏமாற்றிவிட பீச்சில் கையும் களவுமாக பிடிபட்டார் நேசமணி. வாழ்க்கை நேசமணியை துரத்தியது. ஆனால் நேசமணி துவண்டுபோகவில்லை. சண்முகம் சலூன் கடை வைத்து ஸ்டெப் கட்டிங்க், ஸ்டைல் கட்டிங்க், பாப் கட்டிங்க் என்று தொழிலை கற்றுக்கொண்டு சைன் பண்ண ஆரம்பித்தார் நேசமணி. ஆனால் அந்த வேலையும் சில சக்திகளால் போய்விட வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற தன்னார்வமற்ற சங்கத்தை துவங்கினார் நேசமணி. கட்டதுரையின் பொறாமையாலும் அரசியலாலும், அவர் தேசிக்காய் உரித்து வைக்க மற்றவர்கள் விளக்கை ஏற்றும் கொடூரமும் நேசமணியின் வாழ்வில் நடந்தேறியது.


யார்யாரோ காலை பிடித்து பேலஸ்ஸில் ஒரு கான்ட்ராக்ட்டை வாங்கி பங்களாவுக்கு வெள்ளையடிக்கப்போன நேரத்தில் தான், தன் அண்ணன் மகன் கிச்சுணமூர்த்தியால் சுத்தியல் தாக்குதலுக்குட்பட்டு தற்போது ICU வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நேசமணி. அவருக்காக பிரார்த்திக்க தேவையில்லை. கொஞ்சமாவது அனுதாபப்படுங்கள்.


#prayfornesamani #pray_for_nesamani Contractor Nesamani

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...