Wednesday 22 June 2022

கமலை / கவலையோட்டுதல் / ஏற்றம்

கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்,
மலையிட்ட புயத்தரசர் மணிமகுடம் சூட்டுவதும்,
தலையிட்ட பொருள்நான்கும் தலைநீட்டப் படுவதுவும்,
நிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே.
           -ஏரெழுபது (துலையிட்ட நீரீன் சிறப்பு -40), கம்பர்.

விளக்கம்
கலையனைத்தும் கற்றறிந்த வேதம் ஓதும் அந்தணர்கள் அக்னி வளர்த்து யாகம் புரிவதும்;
மலை போன்ற வலிமையுடைய அரசர்கள் மணிமகுடம் சூடிக்கொள்வதும்;
சிறப்பு பொருந்திய வணிகர்கள் வாழ்வதற்காகப் பொருள் ஈட்டுவதும்; என
அனைவரும் நிலைபெற்று விளங்கும் விவசாயத் தொழில் புரியும் விவசாயிகளின் ஏற்றத்தைத் துணையாகக் கொண்டு பாய்ச்சிய நீரினால் மட்டுமே ஆகும்.

கமலை/கவலை


புகைப்படம் 1920 ல் மெட்ராஸ்ல் வெளியிடப்பட்ட அஞ்சல் அட்டை (post card)


  கமலை என்பது ஒரு கிணற்றிலிருந்து நீரிறைக்கும் சாதனமாகும். இதைக் கொண்டு ஒரு காலத்தில் வேளாண்மை நடந்துவந்தது.

  நன்செய்ப் பாசனத்திற்கு, ஆற்றுநீர் இல்லாவிடங்கட்குக் கண்ணாறுகளும் கால்வாய்களும் வெட்டிப் பாய்ச்சினர். அது இயலாவிடத்து ஏரிகளை வெட்டினர். ஏர்த்தொழிற்கு உதவுவது ஏரி. குளிப்பது குளம். இன்று ஏரியைத் தவறாகக் குளமென்பர் ஒரு சாரார். இயற்கையாக உண்டான ஏரி அல்லது குளம் பொய்கை எனப்படும். முல்லைநிலத்திற் புன்செய்ப் பாசனத்திற்குக் கிணறு களை வெட்டினர்.


புகைப்படம் 1920 ல் மெட்ராஸ்ல் வெளியிடப்பட்ட அஞ்சல் அட்டை (post card)

   எருதுகளைக் கொண்டு கிணற்றுநீரை இறைக்கும் ஏற்றம் கம்மாலை எனப்பட்டது. அம் = நீர், அம் - கம் = நீர். கம் + ஆலை = கம்மாலை. ஆலை சுற்றி வருவது. கம்மாலையென்பது இன்று கமலை என்றும் கவலை என்றும் திரிந்து வழங்குகின்றது.  இன்று எருதுகள் நேராகச் செல்வதால் கவலையோட்டுதல் என்றும் கூறுவர்.

எருது


  விதைக்கென்று முதற் காய்ப்பையும் சிறந்த மணிகளையும் ஒதுக்கி வைத்தனர். அக்காலத்து உழவர் பொருளீட்டலைக் குறிக் கொள்ளாது, உணவு விளைத்தலையே குறிக்கொண்டு பதினெண் கூலங்களையும் அவற்றின் வகைகளையும், ஆண்டுதோறும் விளைத்து வந்தனர். நூற்றுக்கணக்கான நெல்வகைகள் விளைக்கப் பெற்றன. அவற்றுட் பெரும்பாலனவற்றை இன்று கண்ணாலும் காண முடியவில்லை; காதாலும் கேட்க முடியவில்லை. பொன் தினை, செந்தினை, கருந்தினை என்னும் மூவகையுள், இன்று பொன்றினையே காண முடிகின்றது. அவரை வகைகளுட் பல ஆண்டு தோறும் ஒவ்வொன்றாய் மறைந்து வருகின்றன. இன்று ஆட்சியை நடத்துபவருக்குப் பதவியைக் காக்க வேண்டு மென்பதேயன்றி, விதை வகைகளைப் பேணவேண்டு மென்னும் கலை நோக்கில்லை. 


   தமிழகத்தில் உழவுத்தொழிற்கு இன்றியமையாத் துணையாக, தொன்றுதொட்டுப் பயன்பட்டுவரும் விலங்கு எருதாகும், ஏர்த் தொழிற்கு உதவுவதனால் காளை எருதெனப் பட்டது. ஏர் - ஏர்து-எருது. காட்டுமாட்டைப் பிடித்துப் பழக்கி வீட்டு விலங்காக்கி ஏர்த்தொழிற்குப் பயன்படுத்தினர். 


   எருதின் இன்றியமையாமை நோக்கியே ஏர்த் தொழிலைப் பகடு என்றனர். 

"பகடு புறந்தருநர் பாரம் ஒம்பி" (புறம். 35) 

"பகடு நடந்த கூழ்" (நாலடி. 4)


உழவுத்தொழிலும் பாண்டியம் எனப்பட்டது.

"பாண்டியஞ் செய்வான் பொருளினும்" (கலித்.136) 

பாண்டி எருது.

   எருதுகளை நிறம் பற்றியும் திறம்பற்றியும் பலவகையாக வகுத்து, அவற்றுள் நால்வகையைச் சிறப்பாக இறக்க வரிசையில் எடுத்துக் கூறினர். அது "முழுப் புல்லை, முக்கால் மயிலை, அரைச் சிவப்பு. கால் கருப்பு;" எனப் பழமொழியாய் வழங்கி வருகின்றது. 

சால் பறி



  இது இரண்டு வகைப்படும் படத்தில் உள்ளது இரும்பு பறி, இன்னொரு வகை தோலினால் ஆன பறி இதில் இரும்பு பறி அதிக நாளைக்கு உழைக்கும் தண்ணீர் அதிகம் பிடிக்கும் தோல் பறி ஆனது குறுகிய நாளில் சேதாரம் ஆகி கிழிந்து விடும் தண்ணீர் குறைவாக தான் பிடிக்கும்

  இரும்பு பறி வைத்திருக்கும் விவசாயிகள் எருதுகள் பெரியதாக இருக்கும் தோல் பறி வைத்திருக்கும் விவசாயிகள் எருதுகள் சிறியதாக இருந்தாலே போதும்.


கமலை/கவலை செயல்படும் விதம்


  தண்ணீர் இறைக்க “கவலை”, (சில ஊர்களில் கமலை,ஏற்றம்,ஏத்து என்பார்கள்) உபயோகப்படுத்துவார்கள். ஒரு கிணற்றுக்கு ஒன்று முதல் இரண்டு கவலைகள் இருக்கும். சாதாரணமாக ஒரு கவலைகள்தான் பெரும்பாலான கிணறுகளில் இருக்கும். தண்ணீர் வசதி அதிகம் இருந்தால் நான்கு கவலைகள் கூட இருக்கும்

  ஒவ்வொன்றுக்கும் இரண்டு எருதுகள், ஒரு ஆள். இரும்பு பறி அல்லது தோலினால் ஆன “பறி” என்று அழைக்கப்படும் ஒரு விதமான பெரிய பையை, வடக்கயிறு என்று சொல்லப்படும் ஒரு பெரிய கயிறு கட்டி ஏற்று உருளை மூலம் முன்னும் பின்னுமாக எருதுகளை ஓட்டி தண்ணீர் இறைப்பார்கள். ( கிணற்றில் வாளி மூலமாக தண்ணீர் சேந்துகிற மாதிரி)

  அந்தப்பறிக்கு ஒரு வால் இருக்கும். அதை வால் கயிறு எனப்படும் ஒரு சிறிய கயிற்றால் கட்டியிருப்பார்கள்.இதுவும் நிலத்து மட்டத்தில் இருந்து அரை அடி உயரத்தில் சிறிய உருளை மூலம் சிறிய வடக்கயிறும் வால்க்கயிறும் எருதுகளின் நுகத்தடியில் கட்டியிருப்பார்கள். பறி கிணற்றுக்கு மேல் வந்தவுடன் அந்த வால் வழியாக நீர் வாய்க்காலில் விழுவதற்குத் தோதாக வால் கயிற்றை இழுப்பார்கள். தண்ணீர் வால் வழியாக வாய்க்காலில் விழும்.

  அந்த கவலை மூலம் நீர் இறைப்பதே, பார்ப்பதற்கு ஒரு வேடிக்கையாக இருக்கும். இதில் மனித உழைப்பிலும் மாட்டின் உழைப்பிலுமே கிணற்று நீர் வெளியே வந்து சேர்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்

  ஒரு நாள் முழுவதும் கவலை இறைத்தால் அரை ஏக்கர் நிலம் நீர் பாய்ச்சலாம். பயிர்களுக்கு எப்படியும் எட்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். ஆக மொத்தம் ஒரு கிணறும் இரண்டு கவலைகளும் இருந்தால் தண்ணீர் வசதி அதிகம் இருக்கும் காலங்களில் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலம் பாசன விவசாயம் செய்யலாம்.

  ஆனால் இரண்டு எருதுகளும் திறமைசாலியாக இருக்கவேண்டும்

  அப்பொழுது எல்லாம் சிறு தானிய பயிர்களை மட்டுமே சாகுபடி செய்தார்கள் அதுவும் குறுகிய நாளில் வரக்கூடிய கேழ்வரகு, கம்பு, சோளம்,மிளகாய் போன்ற வகைகள்தான் அதிகம் நெல் நடவு செய்யமுடியாது இதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும் தேவையான தண்ணீரை பாய்ச்சமுடியாது.

கமலையின் மகத்துவம்

  நீரில் மூன்று அடுக்குகள் உள்ளன. முதலாவது மேல்மட்ட நீர் (surface water), இரண்டாவது தந்துகிக் குழாய் நீர் (capillary water), மூன்றாவது நிலத்தடி நீர் (ground water).

  பொதுவாக மேல்மட்ட நீரானது குளங்களிலும் ஆறுகளிலும் காணப்படும். நிலத்தடி நீர் என்பது 100 அடிக்கும் கீழே தண்ணீர் தாவளங்களாக (aquifers) காணப்படும். இதற்கிடையில் உள்ள நீர், நுண்துளை நீர் என்று அழைக்கப்படும். இது ஆண்டுதோறும் பெய்யும் மழை, குளங்களில் சேமிக்கப்படும் நீரின் அளவு, காணப்படும் மரங்களின் அடர்த்தி ஆகியவற்றைக்கொண்டு உருவாகும்.

  பொதுவாகக் கமலைக் கிணறுகள் யாவும் இந்த நுண்துளை நீரை மட்டுமே பயன்படுத்துபவை. கமலையின் இறைப்பு அளவும், கிணற்றின் நீர் ஊறும் திறனும் பெரும்பாலும் சமமாக இருக்கும். ஒரு சால் நீரை வாய்க்காலில் ஊற்றிவிட்டு, அடுத்த சால் இறைக்கப் போகும்முன் நீர் ஊறிவிடும். இதைத்தான் நீடித்ததன்மை (sustainability) என்று இப்போது பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

மின் எக்கி

  வங்கிகள் மின்எக்கிகளை (electric motor) அமைத்துக்கொள்ளக் கடன் வழங்கின. கடன் பெறத் 'தகுதி' பெற்றோர் கடன் வாங்கி 'மோட்டார்களை' அமைத்துக்கொண்டனர். ஒரு சிற்றூரில் 100-க்கு 80 பேர் கமலை வைத்திருந்தார்கள் என்றால், அதில் 20 பேருக்கு மட்டும் கடன் கிடைத்தது. அதாவது, 80 உழவர்களில் 20 பேர் மின்எக்கிகளுக்கு மாறினர்.

  மின்சார எக்கிகள் நீரை மிக வேகமாக உறிஞ்சின. கிணற்றின் ஊறும் வேகம் மின்சார எக்கிகளுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே, கிணறுகளில் நீர் மட்டம் அதி வேகமாகக் கீழிறங்கியது. இதனால் மீதமுள்ளவர்களும் மின்சார எக்கிகளுக்கு மாற வேண்டும் அல்லது சாகுபடியைக் கைவிட வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகினர். இதனால் கமலைகள் காணாமல் போயின. படிப்படியாக ஏற்றம் மூலம் தண்ணீர் பாய்ச்சு வதை நிறுத்தியதால் தற்போதுள்ள இளைஞர்களுக்கோ, காளை களுக்கோ ஏற்றம் மூலம் தண்ணீர் இறைக்கத் தெரியாமல் போய் விட்டது.

                                                                                         எழுத்து,                                                                                                          N2R நந்தகுமார்

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...