Thursday 17 May 2012

இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்



   மத்திய அரசு, இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. அதேசமயம், ரசாயன உரத்திற்கான மானியத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார், பார்லிமென்டில் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், மண் வளம் குறைந்து போவதுடன், வேளாண் உற்பத்தியும் குறையத் துவங்கியுள்ளது. எனவே, ரசாயன உரத்திற்கு அளிக்கப்படும் மானியத்தை குறைக்கவும், அதேசமயம் இயற்கை ரசாயன உர உற்பத்தியை மேம்படுத்துவதற்கான, நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.நாட்டின் முதல் பசுமை புரட்சியின் போது, ரசாயன உர பயன்பாட்டால், வேளாண் உற்பத்தி, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. ஆனால், ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், மண் வளம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதிகளில் அதிகளவு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டதால், தற்போது, அப்பகுதிகளில், நெல் சாகுபடி மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகி விட்டது.இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, இப்பகுதிகளில் பருப்பு வகைகள், கோதுமை, எண்ணெய் வித்துக்கள் போன்ற தானியங்களை அதிகளவில், பயிரிடும் வகையில் விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.நாட்டின் கிழக்கு பகுதிகளில் உள்ள பல மாநிலங்களில், நெல் சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசு, மண் வளத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. நுண்ணூட்ட சத்து, உயிரி உரங்கள், இயற்கை உரங்கள், பசுந்தாள் உரங்கள் போன்றவற்றை மிக அதிகளவில் உற்பத்தி செய்யும் வகையில், திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும், பழங்கள் மற்றும் காய்கறி கழிவுகள் வாயிலாக, இயற்கை உர வகைகளை உற்பத்தி செய்வதற்காக, பெரிய அளவில் தொழில் பிரிவுகளை அமைக்க நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.இதன் வாயிலாக, எதிர்காலத்தில், இயற்கை உர வகைகள் உற்பத்தி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மண் வளம், மேலும் மேம்படுவதுடன் இயற்கை சாகுபடியின் மூலம் அதிகளவில், வேளாண் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Ruler can do anything, so Born to rule the Galaxy

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...