Thursday 8 August 2024

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!


  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தி அறிவித்தது. இதை எதிர்த்து கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். 1970 ம் ஆண்டு மே 09 ல் பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் விவசாயிகள் கோயம்புத்தூரில் பேரணி நடத்தினார்கள். நகரம் அதிர்ந்தது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறா விட்டால், ஜூன் 15 ல் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், ஜூன் 19 ல் பந்த் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 போராட்டத்தின் உச்சத்தில் அரசாங்கம் ஒடுக்கு முறையை ஏவி, மூன்று விவசாயிகளின் உயிரைப் பறித்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அரசைப் பணியவைத்தன. மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 1 பைசா குறைக்கப்பட்டது. கடன் வசூல் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.

  காயங்கள் ஆறுவதற்கு முன்பாகவே மாநில அரசு மீண்டும் மின்சாரக் கட்டணத்தை 9 பைசாவிலிருந்து 12 பைசாவுக்கு உயர்த்தி, 01.01.1972 முதல் புதிய கட்டணத்தை அமல் படுத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவை மாவட்ட விவசாயிகள் முதலில் கிளர்ந்தெழுந்தனர். 1972 மார்ச்சில் 12 அம்சக் கோரிக்கைகளை, அரசிடம் முன்வைத்து நிறைவேற்றக் கோரினார்கள் விவசாயிகள்.

  15.04. 1972-க்குள் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கெடு விதித்தார்கள். மே 9-ல் மறியல் போராட்டம் தொடங்கியது. போராடிய விவசாயிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நகரவாசிகள் தினமும் நுகரும் காய்கறிகளையும் பாலையும் விவசாயிகள் நகரங்களுக்கு அனுப்புவதை 02.06.1972 முதல் 04.06.1972 வரை நிறுத்தினார்கள்.

  இதன் மூலம் தட்டுப்பாடு ஏற்படுத்தி, அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதே நோக்கம்.

  இதற்குப் பின்னும் அரசு பணியாததால் கோவை விவசாயிகள் 07.06.1972-ல் புதுமையாக மாட்டு வண்டிப் போராட்டத்தை நடத்தினார்கள். மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள், கோவை நகரின் சாலைகளிலும் சந்துபொந்துகளிலும் மத்திய சிறைச்சாலைக்கு முன்பும் நிறுத்தப்பட்டன. கோவை நகரம் ஸ்தம்பித்தது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'தி நியூயார்க் டைம்ஸ்' உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் அவர்களைப் பாராட்டி 'மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்' என்று இந்தப் போராட்டச் செய்தியை வெளியிட்டன. 

  போராட்டத்தின் வீச்சை உணர்ந்த அரசு பணிந்து 1972 ஜூலை 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அரசுடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதன்படி ஜூலை 19-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்காலிகமாக மின் கட்டண உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது. மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு 1 பைசா குறைக்கப்பட்டது. சிறையில் இருந்த அனைத்து விவசாயிகளும் விடுவிக்கப்பட்டார்கள்."

  தொடர்ந்து மாநில அரசாங்கத்தை இடைநீக்கம் செய்து கவர்னர் ஆட்சி முடிந்த பின் 1980 லிருந்து 1988 வரை எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்த அதிமுக அரசு தமிழகத்தில் முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு குறு விவசாயிகளுக்கு ஒரு ஹெச்.பி. குதிரைத் திறன் கொண்ட பம்புசெட் மோட்டாருக்கு மின் இணைப்புக்கு இலவச மின்சாரம் தரப்பட்டது.

  இன்னுயிரைத் தந்த அந்த தியாகிகளின் பெயர்களை முடிந்தளவு வரிசைப்படுத்துகிறேன்.

1. ஆயிகவுண்டர் (33) 19.06.1970 பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
2. மாரப்பக்கவுண்டர் (37) 19.06.1970 பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
3. இராமசாமி (25) 19.06.1970 பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
4. ஆறுமுகம் (25) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
5. முத்துச்சாமி (21) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
6. சாந்தமூர்த்தி (20) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
7. மணி (30) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
8. இராமசாமி (முத்து) (32) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
9. பிச்சைமுத்து (21) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
10. கோவிந்தராஜுலு (16) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
11. விவேகானந்தன் (35) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
12. இராமசாமி (23) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
13. முத்துக்குமாரசாமி (22) 05.07.1972 அய்யம்பாளையம், பல்லடம் தாலுகா

*14. சுப்பையன் (32) 05.07.1972 அய்யம்பாளையம், பல்லடம் தாலுகா*

15. கந்தசாமி நாயக்கர் (55) 05.07.1972 பழைய அப்பநேரி, கோவில்பட்டி தாலுகா
16. சீனிவாசன் (18) 05.07.1972 சாத்தூர் தாலுகா, இராமநாதபுரம் ஜில்லா
17. கந்தசாமிரெட்டியார் (42) 05.07.1972 அருப்புக்கோட்டை, சாத்தூர் தாலுகா
18. நம்மாழ்வார் (20) 05.07.1972 சூலக்கரை, சாத்தூர் தலுகா
19. கிருஷ்ணசாமி நாயக்கர் - - கோவை சிறையில்
20. பெரியகருப்பன் - - திருச்சி சிறையில்

 தியாகிகளுக்கு அய்யம்பாளையம், கோவில்பட்டி ஆகிய பல ஊர்களில் நினைவுத்தூண் நிறுவப்பட்டு ஆங்காங்கே இவர்களின் நினைவு நாளன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.

05.07.1972 அன்று விவசாயிகள் போராட்ட துப்பாக்கி சூட்டில் விவசாயிகளுக்காக களச்சாவு கண்ட விவசாயிகளின் தியாகி. சுப்பையன் அவர்களின் தவப்புதல்வன் திரு. ராஜேந்திரன் அவர்கள் 07.08.2024 அன்று இறைவணடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து, பல்லடம் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் சார்பில் இன்னாரது ஆன்மா இறைவணடி சேர வேண்டுகிறோம்.


Monday 18 December 2023

மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா....?

மார்கழி மாதம் தனுர் மாதம் ஆகும். தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது. சூரியனுடைய தெற்கு இயக்கம் முடிவடையும் காலம்.

  தமிழ் மாதங்களில் மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே  இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.

  மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.
 
  சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள  வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும்.  விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

   மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.

மார்கழி மாதம் சூரியன் பூமிக்கு மிக அருகில் இருப்பதால் சூரிய கதிர்கள் பூமியில் பட்டுத் தெறித்து ஈர்ப்பு விசை மிக அதிகமாகும். இதனால் தான் மார்கழி மாதம் மனித உடலின் சக்தி மையம் கீழிருந்து மேல்நோக்கி ஈர்க்கப்படுகிறது. மார்கழி தான் மனித உடம்பில் சமநிலையையும் ஸ்திரத் தன்மையையும் கொண்டு வருவதற்கு உசிதமான நேரம். 

  அறிவியல் உண்மைகளை ஆன்மீக வழியில் நமக்கு கொடுத்து சென்ற நம் முன்னோர்கள் வழியில் இந்த அற்புதமான மாதத்தை தவறவிடாமல் அதிகாலை எழுந்து கோவிலுக்கு சென்று முழு பலனையும் அடைந்து மன நிறைவுடன் வழ மார்கழியை கொண்டாடுவோம்! மார்கழி வாழ்த்துக்கள்!!

- N2R நந்தகுமார்

Saturday 18 November 2023

சூரசம்ஹாரம் வரலாறு

தமிழ் கடவுள் முருகனின் சூரசம்ஹாரம் மற்றும் சில வரலாற்று நிகழ்வுகளை எமது அப்புச்சி (கொங்கு தமிழில் தாயாரின் தந்தையை அழைக்கும் சொல்) முருகபத்தர். சுப்பையகவுண்டர் எமது சிறு வயதில் கூற கேட்டு இந்த இந்த வலைப்பதிவை பதிவிட்டு அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
முருகனுடைய வரலாறுகள் பலப்பல. அவற்றில் சிறப்புடையது அவன் தேவர்களுக்கு இடையறாது இடையூறு செய்த சூரபதுமன், சிங்கமுகன், பானுகோபன் முதலியவர்களை எல்லாம் கொன்று குவித்து தேவர்களுக்கும் மக்களுக்கும் அருள் புரிந்ததே. அசுரர்கள் என்றால் ஏதோ விகார உருவம் படைத்தவர்கள் என்பது மாத்திரம் அல்ல. நமது உள்ளத்திலே உதிக்கும் அகங்காரம், காமம், குரோதம் முதலியவைகளைத் தான் உருவகப்படுத்தி அசுரர்கள் என்று கூறப்படுகிறது. இந்த அசுரர்களைத் தொலைத்து சூரசம்ஹாரம் நடத்துவதற்கு, முருகன் அருள் பாலிக்கத்தானே வேண்டும்.

சூரசம்ஹாரம் புராணங்களில் எல்லாம் ஒரே விதமாகக் கூறப்படவில்லை. ‘ஏதிலாக் கற்பம் எண்ணில சென்றன, ஆதலால் இக்கதையும் அனந்தமாம்’ என்று சொல்லி கந்த புராண ஆசிரியர் இத்தனை கதைகள் அந்தப் புராணங்களில் இருப்பதற்கு சமாதானம் சொல்லி விடுகிறார். ஆனால் எல்லோரும் ஒப்புக் கொள்ளும் கதைதான் கந்த புராணத்தில் சொல்லப்படுகிறது. கதை இதுதான்.

பிரம்மாவின் புத்திரன் தக்கன் ஒரு வேள்வி செய்கிறான். அந்த வேள்வியிலே தன் மருமகன் ஆம், தாக்ஷாயணியின் கணவன், சிவபிரானுக்கு அழைப்பில்லை. அங்கு அவன் கெளரவிக்கப்படவும் இல்லை. இது தெரியாமல், பிரம்மா, விஷ்ணு, இந்திரன், முதலிய தேவர்கள் எல்லாம் அந்த வேள்விக்குச் சென்று விடுகிறார்கள். இது காரணமாக சிவனுடைய அம்சமான வீரபத்திரனால் இவர்கள் எல்லாம் தண்டிக்கப்படுகிறார்கள். காணும் காணாததற்கு, சூரபதுமன் முதலிய அசுரர்களாலே துன்புறுத்தவும் படுகிறார்கள். தேவர்கள் தங்கள் துயரம் தாங்க முடியாமல் சிவபிரானிடமே சென்று முறையிடுகிறார்கள். சிவபெருமானும் அவர்கள் துன்பத்தை நீக்க ஒரு குமாரனைத் தருவதாக வாக்களிக்கிறார். சொன்ன சொல்லைக் காப்பாற்ற தன்னுடைய ஐந்து திருமுகங்களோடு அதோ முகமும் கொள்கிறார். ஆறு திருமுகத்தில் உள்ள ஆறு நெற்றிக் கண்களில் இருந்து ஆறு பொறிகள் கிளம்புகின்றன. அந்தப் பொறிகளை வாயு ஏந்திச் சென்று அக்னியிடம் கொடுத்து விட்டுத் தப்பித்துக் கொள்கிறான். அக்னியும் அந்தப் பொறிகளின் வெம்மையைத் தாங்காது கங்கையிலேயே விட்டு விடுகிறான். கங்கை இந்தப் பொறிகளை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்க்கிறாள். அங்கு ஆறு பொறிகளும் ஆறு திருக் குழந்தைகளாக மாறுகின்றன. இது நடந்தது வைகாசி மாதத்தில் விசாக நாளில். இப்படித்தான் விசாகன், பிறக்கிறான் இவ்வுலகிலே.

ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்க்கிறார்கள். இந்த கார்த்திகேயனைக் காண சிவபெருமான் உமையம்மையொடு சரவணப் பொய்கைக்கு வருகிறார். அங்கு அம்மை குழந்தைகள் அறுவரையும் சேர்த்து எடுத்து அணைக்கிறாள். தன் மார்பகத்தில், ஆறு குழந்தைகளும் சேர்ந்து ஆறுமுகத்தோடு கூடிய ஒரே பிள்ளையாக மாறுகிறான். கந்தன் எனப் பெயர் பெறுகிறான். ஆறுமுகன் என்று எல்லோராலும் அருமையாக அழைக்கப்படுகிறான்.

அருவமும் உருவம் ஆகி
அநா தியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனியாகி
கருணை கூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து அங்கு
உதித்தனன் உலகம் உய்ய

என்று அறுமுகனது அவதாரத்தைக் கூறுகிறது கந்த புராணம்

இப்படி எல்லாம் பிறந்து கந்தன் வளர்கின்ற போது சூரபதுமனும் தேவர்களை எல்லாம் பிடித்துச் சிறையில் அடைத்துத் துன்புறுத்துகிறான். உடனே கந்தன் தன் கடமையைச் செய்ய முனைகிறான். தன் தந்தையின் கட்டளைப்படி அவனுடன் புறப்படுகிறார்கள் நவவீரர்களும் மற்றவர்களும் எண்ணிறந்த படைக்கலங்களை ஏந்திக் கொண்டு. அன்னையும் பாலகனுக்கு நல்லதொரு வேல் கொடுத்து ஆசி கூறி அனுப்புகிறாள். (சூரனை வேல் கொண்டு சம்ஹாரம் செய்யும் முருகன், தனது அன்னையிடம் வெற்றி வேலினை வாங்குவார். இந்த நிகழ்ச்சி கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளன்று நடைபெறும். இதனைத்தான் சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்று கூறுவார்கள். நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் இந்த நிகழ்வு நேற்று நடைபெறும் பொழுது முருகனின் முகத்தில் வியர்வை பெருகும்.) இந்தப் படையெடுப்பில் முதலில் இலக்கானவர்கள் நரகாசுரனும், கிரெளஞ்சமலையும் தான். இவர்களை வெற்றி காணுவது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லைதான். அதன் பின் தன் சேனா வீரர்களுடன் மண்ணியாற்றின் கரையை அடைந்து, அங்கு சிவனை எழுந்தருளச் செய்து வணங்கி, தன் படைக்கலங்களை இன்னும் பெருக்கிக் கொள்கிறான். சேயன் அமைத்த சிற்றூர் சேய்ஞலூர் என்று பெயர் பெறுகிறது. அங்கிருந்து புறப்பட்ட முருகன் நவவீரர்களுடன் நேரே வந்து விடுகிறான் திருச்செந்துருக்கு. ஏன்? அதை அடுத்த வீரமகேந்திரத் தீவில் கட்டிய கோட்டையைத் தானே தன் கேந்திர ஸ்தானமாகக் கொண்டு சூரபதுமன் ஆட்சி புரிகிறான். நவவீரர்களில் சிறந்த வீரபாகுத் தேவரைத் தூதனுப்புகிறான், சிறையிலிருக்கும் தேவர்களை எல்லாம் விடுதலை செய்யச் சொல்லி, சூரபதுமன் இணங்கவில்லை. போருக்கே புறப்பட்டு விடுகிறான் தன் இளைஞரோடும் வீரரோடும். குமரனும் குமுறி எழுந்து தன்னை எதிர்த்த வீரர்களையும் சிங்கமுகாசுரனையும் கொன்று குவிக்கிறான். ஆறுநாள் நடக்கிறது போர். கடைசியில் போர் முருகனுக்கும் சூரபதுமனுக்குமே நேருக்கு நேர் ஏற்படுகிறது. அந்தப் போரிலே அன்னை தந்த வேலைப் பிரயோகித்து, சூரசம்ஹாரத்தையே முடிக்கிறான். வேற்படையால் இருகூறாகிறான் சூரபதுமன். மயிலாகி வந்த கூறைத் தன் வாகனமாகவும் சேவலாகி வந்த கூறை தன் கொடியாகவும் அமைத்துக் கொண்டு தன்னுடைய உண்மையான உருவத்தைக் காட்டுகிறான் கார்த்திகேயன். இப்படி, மணம் புரிந்த தெய்வயானையையும் வள்ளியையும் தனக்கு மிகவும் உகந்த இடமான திருச்சீரலைவாய்க்கே கூட்டி வந்து தன் பக்கத்தில் நிறுத்திக் கொள்கிறான் பக்தர்கள் எல்லாம் கண்டு களிக்க.

கொங்கை குறமங்கையின்
சந்த மணம் உண்டிடும்
கும்ப முனி கும்பிடும்
தம்பிரானே

இந்தச் செந்திலாண்டவன் கோயிலில் உள்ள ஆறுமுகனைப் பற்றி அருமையான வரலாறு ஒன்று உண்டு. அதையும் தெரிந்து கொள்ளலாம் தானே.

1648ம் வருஷம் மேல் நாட்டிலிருந்து வந்த டச்சு வர்த்தகர்கள் இங்கு வந்து தங்கியிருக்கிறார்கள். என்றோ ஒரு நாள் ஆறுமுகப் பெருமானின் திரு உருவை அவனிருக்கும் வண்ணத்திலேயே கண்டுகளித்திருக்கிறார்கள். அவர்களுடைய களிப்புக்குக் காரணம், அவன் சூரபதுமனை சம்ஹரித்த மூர்த்தி என்பதினால் அல்ல. அந்த மூர்த்தி உருவாகியிருக்கும் உலோகம் பொன்னாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான். அந்த மூர்த்தியை எடுத்துச் சென்று உருக்கினால் அளவற்ற செல்வம் கிடைக்குமே என்று எண்ணியிருக்கிறார்கள். கோயில் நிர்வாகிகள் ஏமாந்திருந்த போதோ, அல்லது நல்ல நடுநிசியிலோ மூர்த்தியைக் களவாடி தங்கள் கப்பலில் ஏற்றி இரவோடு இரவாக கடல் கடத்திச் செல்ல முனைந்திருக்கிறார்கள்.

ஆனால் அறுமுகனோ அவர்களுடன் நெடுந்துரம் செல்ல விரும்பவில்லை. அது காரணமாக கடலிலே புயல் அடித்திருக்கிறது. கொந்தளிக்கும் கடலிலே கப்பல் ஆடி இருக்கிறது. உத்பாதம் நேர்வதை அறிந்த அந்த டச்சு வியாபாரிகள் இனியும் அறுமுகனை தங்களுடன் வைத்திருப்பது தகாது என்று அவனை அலக்காய்த்தூக்கி குமுறும் கடலிலேயே எறிந்து விடுகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் தலை தப்பி தங்கள் ஊர் சென்று சேர்ந்திருக்கிறார்கள்.

கோயிலில் இருந்த அறுமுகவன் காணாமற் போன செய்தியை, நாயக்க மன்னரின் பிரதிநிதியாக விளங்கிய வடமலையப்ப பிள்ளையன் அறிந்திருக்கிறார். மிகுந்த வருத்தமுற்றிருக்கிறார். என்ன செய்வது என்று அறியாதவராய், பஞ்சலோகத்தில் இன்னொரு அறுமுகனை வார்த்தெடுத்து நிறுத்த முனைந்திருக்கிறார். ஆனால் அவர் எண்ணம் நிறைவேறும் முன்னமேயே, ஒரு கனவு கண்டிருக்கிறார். கனவில் கடலுக்குள் இருக்கும் ஆறுமுகனே வந்து, தான் இருக்கும் இடத்தை அறிவித்திருக்கிறார். ‘கடற்கரையிலிருந்து ஆறு காத துரம் சென்றால் அங்கு ஒரு எலுமிச்சம்பழம் மிதக்கும். அந்த இடத்தைச் சுற்றி கருடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பான்; அங்கு முங்கி மூழ்கினால் நான் உந்தி வந்து விடுவேன்’. என்று கூறியிருக்கிறான். வடமலையப்ப பிள்ளையும் குறித்த இடம் சென்று ஆறுமுகனைக் கடலின் அடித்தலத்திலிருந்து எடுத்து வந்து கோயிலில் நிறுத்தியிருக்கிறார். அன்று முதல் அங்கு கோயில் கொண்டிருப்பவனே அந்தப் பழைய ஆறுமுகன், ஆம், வடமலையப்பன் தேடி எடுத்த தேவதேவன், இதன் ஞாபகார்த்தமாக ஒரு நல்ல மண்டபத்தையும் கட்டி முடித்திருக்கிறார் அவர். அந்த மண்டபமே இன்றும் வடமலையப்பன் மண்டபம் என்று வழங்கப்படுகிறது.

இது ஏதோ கற்பனைக் கதை அல்ல. எம்.ரென்னல் என்னும் பிரெஞ்சு அறிஞர். 1785ல் ஜெர்மனியில் பெர்லின் நகரத்தில் இருந்து வெளியிடப்பட்ட சரித்திர இந்தியா என்ற புத்தகத்தில் இந்தத்தகவலை ஒரு டச்சு மாலுமியிடம் இருந்து தான் தெரிந்து கொண்டதாக குறித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி 1648ல் நிகழந்தது என்றும் உறுதியாக உரைத்திருக்கிறார். 1648ல் கடலுக்குள் சென்ற ஆண்டவன் 1653ல் தான் வடமலையப்ப பிள்ளையின் மூலமாக வெளிவந்திருக்கிறான். ஐந்து வருஷம் கடலுக்குள் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருந்து பக்தர்கள் உய்ய நல்ல தவம் பண்ணியிருக்க வேண்டும். தவத்தால் அடைந்த புதிய சக்தியோடு வெளிவந்து பக்தர்களுக்கு அருள் செய்ய திருவுளம் கொண்டிருக்க வேண்டும். பக்தர்களும் இந்தப் புனர் நிர்மாணத்தை 1953ம் வருஷத்தில் முன்னூறாவது ஆண்டு விழாவாகக் கொண்டாடி, ஆண்டவன் கருணையை நினைந்து வாழ்த்தி, மகிழ்ந்து இருக்கிறார்கள்.

இதை ஒட்டியே இன்னொரு வரலாறு. இப்படி கடலில் இருந்து எழுந்தருளிய ஆறுமுகனை அன்று முதல் வடமலையப்ப பிள்ளையன் மண்டபத்திலே எழுந்தருளச் செய்து அங்கு மண்டபப்படி நடத்துவது வழக்கமாக இருந்து வந்திருக்கின்றது. இந்த நிலையில் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்ம நாயக்கர் ஒரு புதிய மண்டபம் கட்டி திருவீதி, உலாப் போந்த ஆறுமுகப் பெருமானை, வடமலையப்பிள்ளையன் மண்டபத்திற்குக் கொண்டு செல்லாமல், நேரே தன் புதிய மண்டபத்திற்கே எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். பாளையக்காரரின் ஆதிக்கத்தை அறிந்த வடமலையப்ப பிள்ளையனோ, இதைத் தடுக்க முனையவில்லை என்றாலும் ஆண்டவன் அறியானா அவர் உள்ளம் துயர் உறுவதை. அவ்வளவுதான், இறைவன் திரு உலா வந்த போது காற்றும் மழையும் கலந்தடித்து அல்லோலகல்லோலப் படுத்தியிருக்கிறது. பல்லக்குத் தூக்கியவர்களோ மேலே செல்ல இயலாதவர்களாய்ப் பக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்திலேயே பல்லக்கை இறக்கி விட்டு உட்கார்ந்து விடுகிறார்கள். மழை நின்று புயல் ஓய்ந்தபின் பார்த்தால் பல்லக்குத் தங்கியிருக்கின்ற மண்டபம், பிள்ளையன் மண்டபமாக இருப்பதைக் காண்கிறார்கள். கட்டபொம்மன் தன் தவறை உணர்கிறார். பிள்ளையனிடம் மன்னிப்புக் கோருகிறார். பிள்ளையனும் ஐயன் கருணையை நினைந்து நினைந்து உருகுகிறார்.

இன்னும் ஒரு வரலாறு. ஆங்கில அன்பர்கள் சிலரையும் ஆண்டவன் பெற்றிருந்தான் என்பதற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலே திருநெல்வேலியிலே கலெக்டராக இருந்தவர் லஷிங்டன் துரைமகனார் (S.R.Lushinglion). அவரை, ஆண்டவன் ஆட்கொண்டிருக்கிறான். 1803ம் வருஷம் அவர் வெள்ளிப் பாத்திரங்கள் பலவற்றை இக்கோயிலுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அத்துடன் இவர் திருச்செந்துரை அடுத்த வீரபாண்டியன் பட்டினத்திலேயே ஒரு பங்களாக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. தமிழர் தெய்வமான முருகன் ஆங்கிலேயர்களையும் தன் அன்புக்கு ஆளாக்கி இருக்கிறான் என்று காண்கிறோம் இவ்வரலாற்றில் இருந்து.

கொங்கணர் ஆரியர் ஒட்டியர்
கோசலர் குச்சலர் ஆம்
சிங்களர் சோனகர் வங்காளர்
ஈழர் தெலுங்கர் கொங்கர்
அங்கர் கலிங்கர் கண்ணாடர்
துருக்கள் அனைவருமே
தங்கள் தங்கட்கு இறை நீ
என்பர் பேரரிச் சரவணனே

                                                   -N2R நந்தகுமார்

Saturday 15 April 2023

சோபகிருது வருடம் சித்திரை மாதம் 01 நாள் தமிழ் புத்தாண்டு. வாழ்த்துக்கள்

மனைவியின் காதல் பெரியதா? மகளின் காதல் பெரியதா?


ஆதி நெருப்பின் கதகதப்பு காதல்! 
உலகின் முதல் உன்மத்தம் காதல்! 
வயதையும் மனதையும் போட்டு விழுங்கும் புதிர்பூதம் காதல்!
Chemistry-யின் History யாய் இருப்பது இந்தக் காதல்!

அத்தகைய காதல் கொண்டு உங்களை வரவேற்கிறேன்.

ஒரு தோழி கேட்டிருந்தாங்க...

 நண்பா, என் கணவர் எனக்குத் தர முக்கியத்துவத்தைவிட என் மகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார். அவள் மீதே அதிக அக்கறையோட இருக்கிறார். இதுவே அவர்மீது எனக்குக் கோவமாக மாறுகிறது. நீங்க சொல்லுங்க. மனைவிமீது கொண்ட காதல் பெரியதா? மகள்மீது கொண்ட அன்பு பெரியதான்னு கேட்டிருந்தாங்க.

Alfred என்ற உளவியல் நிபுணர் என்ன சொல்றார் தெரியுமா? 
 ஒவ்வொரு ஆணும் தன் மனைவியிடத்தில் ஒரு குழந்தைத்தனத்தை எதிர்பார்க்கிறான்! அது கிடைக்காத போது மனைவியின் உருவச் சாயலில் குழந்தையாகவே கிடைக்கும் மகளின்மீது அவனது அன்பு 100 மடங்காக பெருகுகிறதுன்னு சொல்றாருங்க.

எந்த ஒரு ஆண், மனைவியை அதிகம் காதலிக்கிறானோ அவனால் மட்டுமே மகளை அதிகம் நேசிக்க முடியும்னு உளவியல் நிபுணர் சொல்றாருங்க.

அதனால் தானே பாரதி செல்லம்மாவைக் காதலித்தார்... ஆனால் தன் மகள் கண்ணம்மாவைத்தானே பாடினார்.

“ஓடி வருகையிலே உள்ளம் குளிருதடி பாடித் திரிதல் கண்டால், உன்னைப் போய்
ஆவி தழுவுதடி
உச்சிதனை முகர்ந்தால் கர்வம்
ஓங்கி வளருதடி
மெச்சி உனைஊரார் புகழ்ந்தால் என் மேனி சிலிர்க்குதடி
கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி" னு
 பாரதி தன் மகளின் மீதான பாசத்தை
வெளிப்படுத்தியிருக்கிறாரில்ல.
   நா.முத்துகுமார் இன்னும் ஒருபடி மேலே போய் எழுதுவாருங்க

"மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு பட்டுமே தெரியும்.
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறான்"னு சொல்லியிருப்பாரு.

இந்த மகள்களை யார் ஒருவன் நேசிக்கிறானோ, அவன் தன் மனைவியின் மீதும் அதீத நேசிப்புடன் இருப்பாங்களாம்.

 ஒரு கூட்டுக் குடும்பம்! அப்போதான் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகியிருக்கு. இருவரும் தனியறையில் விளையாடிட்டு இருக்காங்க. என்ன விளையாட்டுனா யார் வந்து கதவைத் தட்டினாலும் கதவை திறக்கக் கூடாதுனு... முதல்ல பையனோட அம்மா கதவைத் தட்டுறாங்க. அந்தப் பையன் அதை ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டுக் கதவைத் திறக்கவில்லை. அடுத்து பையனோட அப்பா, அதற்கடுத்து பையனோட தங்கை இப்படி ஒவ்வொருத்தரா கதவைத் தட்டுறாங்க. இவங்க கதவைத் திறக்கவே இல்லை. கொஞ்ச நேரம் கழிச்சு மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்குது.

இப்போ, அந்தப் பெண் ஜன்னல் வழியா பாக்குறா. தட்டியவர் பெண்ணோட அப்பா. 'தங்கம்... நான் தான் நிக்கிறேன். அப்பா வந்திருக்கேன். கதவைத் தெறம்மா"னு ஒரே அழைப்புதான். அந்தப் பெண்ணிற்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வருவதை அடக்கிக்கொண்டு ஓடிப்போய் கதவைத் திறந்துப்பா... இதை எல்லாத்தையும் கண்டு அந்தப் பையன் சிரிச்சிட்டே இருந்தான்.

இரண்டு நாள் கழித்து என்ன குழந்தை வேண்டும்னு இரண்டு பேரும் மொட்டை மாடியில பேசிட்டு இருந்தாங்க. கணவன் கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னான். கண்டிப்பாய் எனக்குப் பெண் குழந்தை தான் வேணும்னு சொன்னான். ஏன்னு மனைவி கேட்டாள். கடைசி காலத்தில் மகள் தானே நமக்குக் கதவைத் திறப்பான்னு சொன்னதா அந்தக் கதை வரும்...!

மகள்களைப் பெற்ற தந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! அத்தகைய தந்தைகளைக் கணவனாய் பெற்ற மனைவிகள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

இன்னொரு முறை அவர் உங்கள் மகள் மீது கவனத்தைச் செலுத்தினாலோ, உங்கள் மகள் மீது அதிக அக்கறை செலுத்தினாலோ, உங்கள் மகள் மீது முக்கியத்துவத்தைச் செலுத்தினாலோ அவரோடு நீங்கள் அதிகம் காதலைச் செலுத்துங்கள்.

நன்றி!
மதுரை ராமகிருஷ்ணன்

Monday 30 January 2023

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் மஹாலிங்கேஷ்வரர் கோவில், திருவிடைமருதூர்

முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவு போட்டுக்கொண்டு நிம்மதி இல்லாமல் இருப்பார்கள். ஒரு சிலருக்கு உடல்நல ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டேயிருக்கும். வேறு சிலர் வசதியின்றி, வறுமையில் கஷ்டப்பட்டு வருவர். அது மட்டுமில்லாமல் திருமணம் நடைபெறாமல் தள்ளிப்போதல், குழந்தை பேறின்மை, திருமணமான தம்பதியரிடையே பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள், துன்பங்கள் போன்றவைகள் வருவதற்கு தலைமுறை, தலைமுறையாக ஏற்படும் முன்னோர்களின் சாபங்கள் தான் காரணம் என்று நம்பப்படுகிறது. அதையடுத்து, முன்னோர்களின் சாபங்களை போக்குவதற்கான கோயில் குறித்து பார்க்கலாம்.
* பிரம்மஹத்தி தோஷம் :

• சாபங்களிலேயே மிகவும் கொடிய சாபமாக முன்னோர்களின் சாபமே பிரம்மஹத்தி தோஷமாக கருதப்படுகிறது.
• பிரம்மஹத்தி தோஷத்தை போக்கக்கூடிய கோயிலாக கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
• 1200 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் போன்றோர்களால் பாடப்பட்டதாகும்.
• முன்பொரு சமயம் மதுரையை அரசாட்சி செய்து வந்த வரகுண பாண்டியன் என்ற மன்னன் வேட்டைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தான்.
• அப்போது சாலையோரமாக தூங்கிக் கொண்டிருந்த அந்தனன் மீது குதிரையின் கால்பட்டு இறந்து விட்டான்.
• இந்த செயல் பாண்டிய மன்னனுக்கு தெரியாமலே நடந்தது என்றாலும் மன்னனை, பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.
• பெரிய சிவபக்தனான வரகுண பாண்டியன் இதிலிருந்து விடுபட மதுரை சோமசுந்தரரை வணங்கினான்.
• அப்போது வரகுண பாண்டியன் கனவில் தோன்றிய சிவபெருமான், சோழ நாட்டில் உள்ள திருவிடைமருதூர் சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும் என கூறினார்.

* திரும்பி வரும் போது...

• எதிரி மன்னனாக திகழும் சோழ நாட்டிற்குள், எப்படி செல்வது என நினைத்துக் கொண்டிருந்த போது, பாண்டிய நாடு மீது சோழ மன்னன் படையெடுத்து வந்திருப்பதாக செய்தி கிடைத்தது. 
• அதையடுத்து, போரில் வென்ற வரகுண பாண்டியன், சோழ படைகளை அவர்களது எல்லைக்கு விரட்டினான்.
• அப்போது திருவிடைமருதூர் கோயிலில் கிழக்கு வாயில் வழியாக சென்று மகாலிங்கேஸ்வரரை தரிசனம் செய்து பாண்டிய மன்னன் வழிபட்டான்.
• வரகுண பாண்டிய மன்னன் கோயிலுக்குள் நுழையும் போது, அவரை பற்றி இருந்த பிரம்மஹத்தி தோஷம் வெளியே நின்றது.
• வரகுண பாண்டியன் திரும்பி வரும் போது மீண்டும் பற்றிக் கொள்ளலாம் என நினைத்து காத்திருந்தது.
• அப்போது சிவபெருமான், நீ மேற்கு வாயில் வழியாக வெளியே போ என கூறினார். அதனால் வரகுண பாண்டியனை தொற்றி இருந்த பிரம்ஹத்தி தோஷம் நீங்கியது.
• அதையடுத்து, பாண்டிய மன்னன் சென்றது போலவே, இன்றும் இந்த கோயிலுக்கு செல்லும் சிவ பக்தர்கள் கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்து, மேற்கு வாயில் வழியாக வெளியே செல்வது வழக்கமாக உள்ளது.

* சிறப்பு :

• உலகளவில் மருத மரத்தை ஸ்தல விருட்சமாக கொண்டிருக்கும் 3 கோயில்களில் இதுவும் ஒன்றாகும். ஸ்ரீசைலம் மற்றும் திருநெல்வேலி ஆகியவை மற்ற 2 கோயில்களாகும்.
• திருவுடைமருதூர் கோயிலில் இருக்கும் 3 பிரகாரங்களை வலம் வருவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

* அஸ்வமேதப் பிரகாரம் :
முதலாவதாக இருக்கின்ற இந்த வெளிப்பிரகாரத்தை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

* கொடுமுடிப் பிரகாரம் :
இரண்டாவதாகவும், மத்தியிலும் இருக்கும் இப்பிரகாரத்தை வலம் வருவது. சிவபெருமான் குடியிருக்கும் கைலாய மலையை வலம் வருவதற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

* பிரணவப்பிரகாரம் :
மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும்.

7 தலைமுறை முன்னோர்களின் பாவத்தை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த சிவ மந்திரம்.. 

ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹ 
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மல்லேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹ

ஓம் நம சிவாய...
இந்த கோவில் மயிலாடுதுறை இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது.

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...